நாட்டில் நிலவி வரும் ஊழலை எவ்வித உண்ணாவிரதப் போராட்டத்தாலோ, மற்ற வகையான போராட்டங்களினாலோ ஒழிக்க முடியாது என்றும், ஊழலை, நல்ல அரசியல் செயல்பாடுகளினால் மட்டுமே ஒழிக்க முடியும் என்று காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ராகுல் தெரிவித்துள்ளார். தலைநகர் டில்லியில், இளைஞர் காங்கிரசார் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய ராகுல் கூறியதாவது, ஊழல், தற்போது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. இது இளைய தலைமுறையினரின் வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக உள்ளது. ஊழலை ஒழிக்க நல்ல அரசியல் செயல்பாடுகளினால் மட்டுமே முடியும். இதற்கு இளைஞர்கள் அதிகளவில் அரசியலில் பங்குபெற வேண்டும் என்று அவர் கூறினார். வெறும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதன் மூலமாக, ஊழலை ஒழித்துவிட முடியும் என்று சிலர் பகல் கனவு கண்டுவருவதாக, மறைமுகமாக காந்தியவாதி அன்னா ஹசாரேவை அவர் தாக்கிப் பேசினார்.